Home  |  சினிமா விமர்சனம்

மனிதன் விமர்சனம்!!

மனிதன் விமர்சனம்!!

உதயநிதி தன்னை ஒரு நடிகனாக நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களும் சந்தானத்தின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை நம்பி மட்டுமே படம் வெளிவந்தது.கொஞ்சம் வித்தியாசமாக கெத்து படத்தில் சந்தானம் இல்லாமல் ஒரு ஆக்‌ஷன் படத்தில் களம் இறங்கினார். அந்த படம் பெரிதும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை, அதனால், முதலில் தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க வேண்டும் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற ஜாலி llp படத்தின் ரீமேக் உரியமையை வாங்கி தயாரித்து நடித்துள்ளார். ஒரு நடிகனாக உதயநிதி வெற்றி பெற்றாரா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

ஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு எந்த கேஸும் கிடைக்காமல், போராடிக்கொண்டு இருக்கிறார் உதயநிதி, சுற்றி இருப்பவர்கள் தன்னை கிண்டல் செய்வது கூட தெரியாத அப்பாவி, ஒரு வழக்கில் வெற்றி பெற்றால் தான், தன் மாமாவிடம் பொண்ணு(ஹன்சிகா) கேட்க முடியும் என கோபமாக சென்னை கிளம்பி செல்கிறார்.சென்னையில் இதற்கு மேல் கஷ்டப்படுகிறார், விவேக்கை நம்பி உதயநிதி சென்னை வந்தால் அவரே அங்கு ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருகின்றார். இந்த நேரத்தில் தான் நாடே தீர்ப்பு எதிர்ப்பார்க்கும் ஒரு வழக்கில் வாண்ட்டாக ஆஜர் ஆகிறார் உதயநிதி.நடைப்பாதையில் படுத்திருந்தவர்களை கார் ஏற்றி கொன்ற ஒரு பெரிய இடத்து பையன் வழக்கை, கையில் எடுக்கிறார். ஆனால், அந்த பையனுக்கு ஆதரவாக இந்தியாவில் நம்பர் 1 வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடுகிறார்.ஊரே தன்னை ஒரு மொக்கை லாயர் என்று சொல்கின்றது, நாம் சாதிக்க இது தான் சரியான தருணம் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக உதயநிதி களம் இறங்க, இறுதியில் வெற்றி யாருக்கு என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இதுவரை நடித்த 5 படங்களில் இது தான் உதயநிதியின் பெஸ்ட் என்று சொல்லிவிடலாம், எந்த ஒரு இடத்திலும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஹீரோ திட்டு வாங்குகிறார், ஒரு சில இடங்களில் எல்லாம் ஜுனியர் ஆர்டிஸ்டே கலாய்க்கிறார்கள், அடி வாங்குகிறார், திணறி திணறி வாதடுகிறார் இதுபோன்று தன் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து முதன் முறையாக ஒரு ஹீரோவாக நம் மனதை உதயநிதி வென்றுவிட்டார். ஹன்சிகா உதயநிதிக்கு சப்போர்ட் தரும் கதாபாத்திரம் தான் என்றாலும் முதன் முறையாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான அழகான நடிப்பால் கவர்கிறார். ஐஸ்வர்யா ராஜேஸ், விவேக் ஆகியோர் கதைக்கு தேவையான நடிப்பை தந்துள்ளனர்.படத்தின் மற்றொரு ஹீரோ கண்டிப்பாக பிரகாஷ்ராஜும், ராதாரவியும்.

படத்தில் இவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்றால், இவர்கள் பெயரை தான் முதலில் போடுகிறார்கள், பிறகு தான் உதயநிதி பெயரே வருகின்றது. பிரகாஷ்ராஜ் ஒரு சீனியர் லாயராக மிரட்டுகிறார், ஏதோ பள்ளி சிறுவனை ஆசிரியர் மிரட்டுவது போல் உதயநிதியை அதட்டி உட்கார வைக்கும் இடத்தில் கம்பீரம். ஆனால், ஒன்றே ஒன்று சொல்லியே ஆகனும், ராதா ரவி சார் நடிகர் சங்க தேர்தலில் தோற்றதால் மிகவும் சந்தோஷப்படுவது பல இயக்குனர்கள் தான்.ஏனெனில் இப்படி ஒரு நடிகனை தான் நாம் இத்தனை நாட்கள் தொலைத்து விட்டோம், அவர் பேசினாலே திரையரங்கம் கைத்தட்ட ஆரம்பித்து விடுகின்றது, அதிலும் படத்தின் பாதி வரை அமைதியாகவும் நிதானமாகவும் இருந்து, ஒரு கட்டத்தில் கோபத்தில் கையை உயர்த்தி பேசும் இடத்தில் சார் சூப்பர் சார்.

படத்தின் பல காட்சியமைப்புகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது, உதயநிதி ஒரு சாதரண மனுஷனாக கேஸை வாபஸ் வாங்க பணம் வாங்கி, அவர் திருந்தும் இடத்திற்கு வைத்த காட்சிகள் கிளாஸ், அதைவிட கிளைமேஸில் நடைப்பாதையில் படுத்திருந்து தன் குடும்பத்தை இழந்தவர் கோர்ட்டில் பேசும் இடம் சூப்பர் அஹமத்.படத்தின் மிகப்பெரும் பலமே ஒளிப்பதிவு, இசையும் தான், மதியின் கேமராவில் நீதிமன்றத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார், சந்தோஷ் நாரயணின் இசையின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் , அதை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார், அதிலும் குறிப்பாக ‘அதோ’ BGM படத்தின் கதையை தாங்கி செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்கு பொருந்திய கதாபாத்திரங்கள், அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.பிரகாஷ்ராஜ்+ராதாரவி போன்ற சீனியர் நடிகர்களின் பங்களிப்பு, படத்தின் இரண்டாம் பாதி வேகம் எடுக்கின்றது.கிளைமேக்ஸில் உதயநிதியும், பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. படத்தின் வசனம் ‘உங்களுக்கு தெரியாத விஷயத்தில் அறிவை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள்’ போன்றவை யோசிக்க வைத்து ரசிக்க வைக்கின்றது.இவை அனைத்தையும் விட, ரீமேக் படம் என்றாலும், நம் சமூகத்தில் பணக்காரர்களால் நடக்கும் பெரிய விபத்துக்களை எப்படி மூடி மறைக்கிறார்கள் என காட்டிய களம்.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கின்றது, எந்த இடத்திலும் சோர்வு இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கின்றது. சில யதார்த்த மீறல், காட்சிகளில் மட்டும்.மொத்தத்தில் இந்த மனிதனில் எடுத்த வழக்கை உதயநிதி வெற்றிகரமாக முடித்தது மட்டுமில்லாமல், ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.

  29 Apr 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *