Home  |  சினிமா விமர்சனம்

காதலும் கடந்து போகும் விமர்சனம்!!

காதலும் கடந்து போகும் விமர்சனம்!!

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் தற்போது கொரியான் படத்தின் தீவிர ரசிகர்கள் தான். கொரியன் சீரியலை கூட விட்டு வைக்காமல் பார்த்து வரும் நிலையில், ஒரு கொரியன் படத்தையே ரீமேக் செய்தால் எப்படியிருக்கும்? என சூது கவ்வும் வெற்றிக்கு பிறகு நலன் குமாரசாமி My Dear Desperado என்ற கொரியன் படத்தை நம்ம ஊருக்கு கொண்டு வந்துள்ளார்.இதில் தன் ஆஸ்தான நாயகன் விஜய் சேதுபதி, இவர் எப்படா தமிழ் சினிமாவிற்கு வருவார் என ஏங்கிய ரசிகர்களுக்காக செலின் (எ) மடோனா கூட்டணியில் இந்த காதலும் கடந்து போகும் படத்தை இயக்கியுள்ளார்.

கதைக்களம்

தன் நண்பருக்காக ஜெயிலுக்கு சென்று வந்து ஒரு பார் ஓனராக வேண்டும் என ஏரியாவில் பெரிய ரவுடி என்ற நினைப்பில் வலம் வருகிறார் விஜய் சேதுபதி. விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஐடி வேலைக்காக பெற்றோர்கள் பேச்சை மீறி மடோனா வருகிறார்.மடோனாவின் கம்பெனி சில நாட்களிலேயே இழுத்து மூட, வீட்டு வாடகை கட்ட முடியாமல் ஒரு லோக்கல் ஏரியாவில் குடியேறுகிறார்.

தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் விஜய் சேதுபதி இருக்க, இருவருக்கும் பல நேரங்களில் மோதல், சில நேரங்களில் காதல் என டாம் & ஜெர்ரி போல் வாழ்கிறார்கள்.இதை தொடர்ந்து விஜய் சேதுபதி பார் ஓனர் ஆனாரா? மடோனாவிற்கு வேலை கிடைத்ததா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை தனக்கே உரிய டார்க் ஹியூமர் ட்ரண்டில் கூறியிருக்கிறார் நலன் குமாரசாமி.

படத்தை பற்றிய அலசல்

இத்தனை நாட்கள் கொரியன் படத்தை டிவிடியில் மட்டும் பார்த்து வந்த நமக்கு, ஒரு கொரியன் படத்தை தியேட்டரில் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற அனுபவத்தை இந்த படம் கொடுத்துள்ளது. ஏனெனில் நிறைய பொறுமை தேவை என்பதை பல இடங்களில் உணர்த்துகின்றது.விஜய் சேதுபதி தற்போது தான் நானும் ரவுடி தான், சேதுபதி என கொஞ்சம் தனது ட்ரண்டை மாற்றி களத்தில் இறங்கி கலக்க, இப்படம் மீண்டும் பழைய கேர்லஸ் கதாபாத்திரம் தான், நானும் ரவுடி தான் என ஊர் முழுவதும் அடி வாங்கி சுற்றி வருகிறார்.படத்தின் உண்மையான ஹீரோ, ஹீரோயின் மடோனா தான். என்னமா நடிக்குது இந்த பொண்ணு என தன் களத்தில் புகுந்து விளையாடுகிறார்.

பல இயக்குனர்கள் கண்டிப்பாக அடுத்தடுத்து கமிட் செய்ய காத்திருப்பார்கள்.படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் இன்றைய சமூகத்தின் வேலையில்லாதவர்கள் குறிப்பாக வேலை தேடும் பெண்கள் நிலையை உரித்து காட்டுகின்றது. இண்டர்வியூ செல்லும் இடத்தில் பாட சொல்வது, ஆட சொல்வது, பிறகு சொல்கிறோம் என அனுப்பிவிட்டு, ‘நல்லா டைம் பாஸ் சார்’ என ஊழியர்கள் அரட்டை அடிப்பது நெத்தியடி காட்சிகள்.இதற்கும் மேலாக வேலைக்காக தன் ஆசைக்கு இனங்க சொல்வது என பெண்களின் அவலத்தை தெளிவாக காட்டியுள்ளார். இதற்கிடையில் பல இடங்களில் தன் ஸ்டைலிலேயே நலன் கிண்டல் கேலி என கலக்கியுள்ளார்.

வாழ்க்கையே ஒரு டைம் பாஸ் தான், எதர்க்கும் வேலைக்கு போகனும், தமிழ் நாட்ல யார் தான் இன்ஜினியர் இல்லை, என பல வசனங்கள் சபாஷ். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மிகவும் யதார்த்தமாக சென்னையை படப்பிடித்துள்ளது. சந்தோஷ் நாரயணன் பின்னணியில் கலக்கி விட்டார். பாடல்கள் ஏற்கெனவே கேட்டது போலவே உள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் வசனங்கள் தான், பல இடங்களில் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.அதிலும் குறிப்பாக மடோனாவின் அப்பாவை ஏமாற்ற விஜய் சேதுபதி ஒரு நெட்வொர்க் மேனேஜர் என்று பொய் சொல்லி சமாளிக்கும் இடத்தில் திரையரங்கு அதிர்கின்றது.அதேபோல் மடோனாவிற்கு இண்டர்வியூவை தள்ளிவைக்க விஜய் சேதுபதி செய்யும் கலாட்டாக்கள் சிரிப்பு சரவெடி.

பல்ப்ஸ்

திரைக்கதை, பலரும் பார்க்காத கொரியன் படத்தின் ரீமேக் என்றாலும் இத்தனை மெதுவாகவா படம் செல்வது.பல குறும்படங்கள் பார்த்தது போன்ற உணர்வு.அனைத்திற்கு மேலாக சூதுகவ்வும் நலன் குமாரசாமி இதில் இல்லை.மொத்தத்தில் காதல் இன்னும் கொஞ்சம் வேகமாக கடந்து இருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.

  11 Mar 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *