Home  |  சினிமா விமர்சனம்

அப்பா விமர்சனம்!!

அப்பா விமர்சனம்!!

தமிழ் சினிமாவில் அவ்வப்போதுதான் குழந்தைகளுக்கான படங்கள் வருகின்றது. அதுவும் குறிப்பாக சமீபகாலமாக பேய் படங்களின் வரிசையில் இருந்து கொஞ்சம் இடைவேளை விட்டு இந்த வாரம் குழந்தைகள் ஸ்பெஷலாக அப்பா படம் வந்துள்ளது.எதையோ நோக்கி ஓடும் மிஷின் வாழ்க்கையை பெற்றோர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் LKG சேரும் போதே அவர்கள் தலையிலும் ப்ரஷரை ஏற்றிவிடுகிறார்கள், இதனால் ஏற்படும் விளைவை சமுத்திரக்கனி சாட்டை எடுத்து விலாசியுள்ளார்.

கதைக்களம்

ஒவ்வொரு அப்பாவிற்கும் தன்னுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் இருக்கும். அப்படிப்பட்ட மூன்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை சமுத்திரக்கனி தன்னுடைய பாணியிலேயே வெளிச்சம் போட்டு காட்டியுள்ள படம் தான் இந்த அப்பா.

படத்தை பற்றிய அலசல்

பொதுவாக சமுத்திரக்கனியின் படங்கள் என்றாலே சற்று எதிர்பார்ப்பும், உணர்ச்சி பூர்வமான வசனங்களும் இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார் சமுத்திரக்கனி.தன்னுடைய மகனிற்கு படிப்பு மட்டும் முன்னேற்றமல்ல இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஒரு நல்ல அப்பாவாக சமுத்திரக்கனி வருகிறார்.தம்பி ராமையா சாட்டை படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இந்த படத்திலும் ஒரு சுயநலமான மனிதராக நடித்திருக்கிறார்.

இந்த உலகம் சுயநலமிக்கது இதில் நீயும் சுயநலமாகத்தான் இருக்க வேண்டும் என்று தன் மகனிற்கு சொல்லிக் கொடுக்கும் போதும் ரசிக்க வைக்கிறார்.என்ன நடந்தால் என்ன நாம இருக்கிற இடம் தெரியக்கூடாது என்று தன்னுடைய பிள்ளையை வளர்க்கும் ஒரு அப்பாவி அப்பாவாக வரும் நமோ நாராயணன்மேலும் சமுத்திரகனியின் மகனாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ்.

இந்த படத்திலும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய சந்தேகங்களை கேட்கும் போதும் அதை சமுத்திரகனி அவருக்கு புரிய வைக்கும் இடத்திலும் ஒரு நல்ல அப்பா மகன் உறவு திரையில் தெரிகிறது.தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் ராகவ் ஒரு பயந்த சுபாவம் கொண்டவராகவும், தன்னுடைய அப்பாவின் புல்லெட் சத்தத்தை கேட்டு பயந்து ஓடும் போதும் ரசிக்க வைக்கின்றார்.

இதை தவிர நமோ நாராயனணின் மகனாக வரும் நாசத் மற்றும் யுவலக்ஷ்மி, கேப்ரியல்லா, திலிப்பன், வினோதினி அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்துக்கு பொருந்தி நடித்துள்ளனர்.படத்தின் காட்சியமைப்புகளுக்கு தனியாக எழுந்து நின்று பாராட்ட வேண்டும், அதிலும் சமுத்திரக்கனி தன் மகன் ஒரு பெண்ணின் மீது ஆசைக்கொண்டாலும், இந்த வயதில் இதை எப்படி அணுக வேண்டும் என்று விவரிக்கும் இடம், நமக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைக்கும் காட்சிகள்.

இளையராஜாவின் இசை எப்போதும் இதுப்போன்ற படங்களுக்கு உயிராக இருக்கும், நம்மையும் அதோடு பயணிக்க வைக்கும், இதில் கொஞ்சம் பயணம் பாதியிலேயே நின்ற அனுபவம்.ரிச்சர்டு M நாதனின் ஒளிப்பதிவும் படத்தின் பட்ஜெட் காரணமா? அல்லது மிகவும் யதார்த்தமாக எடுக்கவேண்டும் என்ற நோக்கமா? என்று தெரியவில்லை. கொஞ்சம் மங்கியே காணப்படுகின்றது.

க்ளாப்ஸ்

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிபேசும் போதும், தன் மகனிடம் அவனை ஊக்கப்படுத்த பேசும் வசனங்களின் போதும் கைதட்டல்கள் பறக்கிறது.தம்பி ராமையாவின் யதார்த்தமான நகைச்சுவை கலந்த நடிப்பு படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறது.படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை சற்று யோசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் பட்ஜெட் காரணமாக ஏதோ குறும்பட சாயல் போலவே உள்ளது, மற்றபடி ஏதுமில்லை.மொத்தத்தில் அப்பா அனைத்து அப்பாக்களும் தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

  01 Jul 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *